அ.தி.மு.க. பொதுக்குழு சென்னை வானகரத்தில் 2022 ஜூலை 11ஆம் தேதி நடந்தது. இந்தப் பொதுக்குழுவில் சில விதிகள் திருத்தப்பட்டன.
முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்தது செல்லும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்றதால், அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதை தவிர்க்கும் விதமாக நீதிபதிகள் தற்காலிக தீர்ப்பு ஒன்றை வழங்கினர்.
இந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் நிறைவடைந்தது.
இதையடுத்து நீதிபதி வழக்கின் தீர்ப்பை மார்ச் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளித்தார்.
அப்போது நீதிபதி, “அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தார். இதைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் ராயபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“