tiruvannamalai | goondas-act | madras-high-court | திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக, அப்பகுதியில் உள்ள 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்பட கையகப்படுத்த திமுக அரசு திட்டமிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் ஜூலை 2-ம் தேதி முதல் 126 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், நவ.2ஆம் தேதி காவல் துறையினர் தடையை மீறி செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து விவசாயிகள் பேரணி நடத்தினார்கள்.
அப்போது, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல் துறை வாகனங்களை சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகள் போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்டன.
இதற்கிடையில், வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேரை கடந்த 4-ம் தேதி கைது செய்த போலீசார் அவர்களை வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர்.
இவர்களில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின.
விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதியப்பட்டதற்கு அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, அருள் ஆறுமுகம் நீங்கலாக மற்றவர்களின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த குண்டர் சட்டத்துக்கு எதிராக அருள் தரப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது” என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஜன.4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“