தமிழ்நாட்டில் குரூப்-2 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2013ஆம் ஆண்டு நடந்தது. இந்தத் தேர்வை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் எழுதியிருந்தார்.
பி.சி. மகளிர் தமிழ்வழிக் கல்வி பிரிவில் படித்துள்ள கல்பனா, அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று 31.8.2015இல் நடந்த கலந்தாய்விலும் பங்கேற்றார்.
அவர் 184 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி தனக்கு பணி வழங்க வேண்டும் என கல்பனா மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். அப்போது, “இயற்கை வளங்களை காப்பதற்கான முக்கியத்துவம் தொடர்பான கட்டுரையில் ஜெய்ஹிந்த் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என முடித்ததால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், “ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் எழுப்பப்பட்டது. இது இந்திய நாட்டின் வெற்றியை குறிக்கிறது.
இதன் உள்ளர்த்தம் உணர்ந்துதான் தலைவர்கள் பேச்சின் தொடக்கதிலோ முடிவிலோ ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இதனை பொறுப்பற்றதாக கருத வேண்டாம்; எனவே, பிரதான தேர்வில் மனுதாரரின் பகுதி 2-க்கான விடைத் தாளை திருத்தி மதிப்பெண் வழங்க வேண்டும். பின்னர் பகுதி-1 மற்றும் பகுதி-2ல் மனுதாரர் பெற்ற மதிப்பெண் மூலம் மனுதாரர் தேவையான கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால், அவருக்கு 4 வாரத்தில் பணி வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“