கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் தாலுகா, இடையப்பட்டி அருகே உள்ள சித்திர சீலமநாயக்கனூரை சேர்ந்த ஒருவர் வெளியூரில் தங்கி வேலை பார்க்கும்போது வேறு சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்தத் திருமணம் இருவரின் சம்மதத்தின்பேரில் நடந்துள்ளது. இந்த நிலையில், இவர்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.
இதையடுத்து நீதிமன்றம் தலையிட்டு கோவிலில் திருமணம் நடந்தது. தொடர்ந்து மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கிராமத்தில் வரும் தண்ணீரை பிடிக்க விடாமல், உறவினர்கள் வீட்டிற்கு செல்ல முடியாதபடி தீண்டாமை வேலி அமைத்துள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வேலி அமைத்துள்ள இடம் பட்டா நிலமா, அரசு புறம்போக்கு நிலமா? எனக் கேள்விகேட்டார்.
மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் தீண்டாமை வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தீண்டாமை வேலி என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல; இது கவனம் கொள்ளக் கூடிய குற்றச்சாட்டு” என்றார். இந்த வழக்கு நவ.28ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
மனுதாரர் தனது புகாரில், “காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக் குற்றஞ்சாட்டியதுடன் தீண்டாமை வேலியை அகற்றி சொத்துக்களை மீட்டு தர வேண்டும்” எனவும் கோரியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“