தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை திரும்பக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் காவல்துறை தலைவருக்கு (டிஜிபி) பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன்படி, “சட்டவிரோதமாக மணல் அள்ளுதல் உள்ளிட்ட கனிமவள கொள்ளையில் ஈடுபட்டால் 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, கனிமவள திருட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பேசிய நீதிபதி, “கனிம கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீண்டும் மீண்டும்
முந்தைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை கனிமவள கொள்ளைக்கு பயன்படுத்துகின்றனர்.
மேலும், கனிமவள கொள்ளையால் சுற்றுச்சூழல் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது” என்றார்.
இதையடுத்து, “30 நாளில் வாகனங்களை பறிமுதல் செய்ய தேவையான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி பிறப்பிக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடப்பாண்டு வரை கனிமவள கடத்தல் தொடர்பாக 59 ஆயிரத்து 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்தக் கடத்தலில் 63 ஆயிரத்து 542 வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. எனினும், 2218 வாகனங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“