சென்னை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பொதுமக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கிளாம்பாக்கத்தில் உள்ள சிறிய குறைகள் நிவரத்தி செய்யப்படும். இரவு 12 மணிக்கு மேல், அதிகாலை வேளைகளில் அதிகளவு பேருந்துகள் இயக்க சாத்தியம் இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கலைஞர் நூற்றாண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வாரம் ஒருமுறை நானும் அமைச்சர் சேகர் பாபுவும் வந்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இங்கு என்ன தேவை இருக்கிறது என்ற கருத்துக்களை கேட்டு அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
தொடர்ந்து இயக்கப்படும் பேருந்துகள் தொடர்பாக பேசிய அவர், “இங்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை பற்றி சந்தேகம் எழுப்பப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட செய்தியை தொடர்ந்து சொல்லி இந்தப் பிரச்னையை பூதாகரம் ஆக்குகிறார்கள்” என்றார்.
மேலும் இரவு 12 மணிக்கு மேல், பயணிகள் பேருந்தை இயக்குவதிலும் சிக்கல்கள் உள்ளன. இரவு நேரங்களில் 200-300 நபர்கள் வருவதாக கூறுகிறார்கள்.
முகூர்த்த தினங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் இருந்தே இரவு 12 மணி முதல் 4 மணி வரை வாகனங்கள் குறைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
அதிகாலை நேரங்களில் விபத்துக்கள் ஏற்படக் கூடும் என்பதால் இது தவிர்க்கப்படுகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“