alanganallur-jallikkattu | madurai | உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று (ஜன.17,2024) நிறைவு பெற்றன. இந்தப் போட்டியில் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி என்பவர் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு காரை அமைச்சர் மூர்த்தி பரிசாக வழங்கினார். இந்த நிலையில் நான்தான் முதலிடம் பிடித்தேன் என இரண்டாம் இடத்தில் உள்ள அபிசித்தர் என்பவர் பேட்டியளித்துள்ளார்.
மாடுபிடி வீரர் அபிசித்தர் பேட்டி
அப்போது அவர், “நான்தான் முதலிடம் பிடித்தேன். ஜல்லிக்கட்டை மாலை 6.30 மணி வரை நீட்டித்தது தவறு. எனக்கு கார் பரிசு எல்லாம் தேவை இல்லை.
நான் முதலிடம் பெற்றேன் என்று அறிவித்தாலே போதுமானது. இந்த விவகாரத்தில் அமைச்சர் மூர்த்தி மீதும் புகார் அளிப்பேன்” என பேட்டியளித்தார்.
இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி பதில் அளித்தார்.
அமைச்சர் மூர்த்தி பதில்
அமைச்சர் மூர்த்தி அளித்த பதிலில், “ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
விழாக்குழு முடிவின்படியே பரிசுகள் வழங்கப்பட்டன. நாங்கள் யாரையும் ஏற்ற இறக்கமாக பார்க்கவில்லை. அனைத்து வீரர்களும் எங்களுக்கு சமம்தான். தகுதியானவர்களுக்கே பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கருப்பாயூரணி கார்த்தி, 18 காளைகளை அடக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“