DMK MP Kanimozhi Tamil News: குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். ஆனால், இந்தாண்டு நடைபெறவுள்ள அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கு நாட்டில் நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று அச்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மத்திய அரசு அடுக்கி இருக்கிறது. இதனால் தான் அணி வகுப்பில் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்நிலையில், தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்
இதற்கிடையில், தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், தமிழக ஊர்தி இடம்பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
மத்திய அரசு விளக்கம்
இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, "தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது. ஆனால் இறுதியான 12 அலங்கார ஊர்திகளில் தமிழகம் தேர்வு செய்யப்படவில்லை. வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது.” என்று தெரிவித்தது.
வ.உ.சி வீடியோ வெளியிட்ட எம்.பி கனிமொழி
முன்னதாக, குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வந்த நிலையில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்த திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.
இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்." என்று பதிவிட்டு இருந்தார்.
இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும். @PMOIndia @rajnathsingh (2/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 17, 2022
இந்த நிலையில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு என்ன?, தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்னென்ன தியாகங்களை செய்தனர்? அதிலும் குறிப்பாக கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.-யின் பங்கு மற்றும் பின்னணி என்ன? என்பதை விளக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திமுகவின் மகளிரணி சார்பிவில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோ ஆங்கில ஆடியோவையும், இந்தி சப்டைடில் உடனும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திமுக மகளிரணியின் லோகோ மற்றும் The name is V.O.Chidambaranar. என பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ, "தமிழ்த் தலைவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காகவும், பரந்த அளவில் சென்றடைவதற்காகவும், சிறந்த புரிதலுக்காகவும் ஆங்கிலத்தில், இந்தி வசனங்களுடன் உருவாக்கப்பட்டது" என்கிற பொறுப்பு துறப்புடனும், "வ.உ.சி. யார் என்று உங்களுக்கு தெரியாதா?அதை நான் சொல்கிறேன்" என்ற வசனத்துடனும் தொடங்குகிறது.
வீடியோவில், 1790-களில் வீரபாண்டிய கட்டபொம்மன் தொடங்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பட்டியலிட்டு, நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வ.உ.சி.யின் பங்களிப்பு மற்றும் ஆங்கிலேயர்களால் " சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிகவும் ஆபத்தானவராக" அவர் எப்படிக் கருதப்பட்டார் என்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
வீடியோவின் இறுதியில்,"சம்ஜா? சமாஜ் லேனா!” (புரிகிறதா?) என்கிற ரஜினியின் 'காலா' படத்தின் டயலாக்கும் இடம்பெறுகிறது.
இந்த வீடியோ தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்திய செய்தி இதழுக்கு திமுக எம்.பி கனிமொழி அளித்துள்ள பேட்டியில், "வ.உ.சி.-யின் மகத்துவத்தைப் பற்றி அறியாத மக்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முதல் ராணி வீரமங்கை வேலுநாச்சியார். இதுபோன்ற பிற சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய வீடியோக்களையும் விரைவில் வெளியிடுவோம்." என்று கூறியுள்ளார்.
The name is V.O.Chidambaranar. #FreedomFighter #TamilLeaders pic.twitter.com/Xi8XgaitQ9
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 21, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.