தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யகோரி நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் நாளை தள்ளிவைப்பு.
அ.தி.மு.க. அம்மா அணியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பா.ஜ.கவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்ததாக அக்கட்சியின் நிர்வாகி ஆனந்த் பல்லாவரம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தன் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அரசியலில் பிற தலைவர்களை விமர்சிப்பது சாதாரணம். ஆனால் இதில் சம்பந்தம் இல்லாத ஆனந்த் என்பவர் கொடுத்த புகாரை அடிப்படையாக கொண்டு தன் மீது பெண்ளுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விசயத்தில் சம்பந்தமே இல்லாத நபரான ஆனந்த் கொடுத்த புகாரை காவல்துறையினர் ஏற்றுக் கொண்டிருக்கவே கூடாது என மனுவில் கூறியுள்ளார்.
மேலும் அரசியலமைப்பு சட்டத்தில், பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது தனக்கெதிராக பதியப்பட்டுள்ள வழக்கு, தன் பேச்சுரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே பல்லாவரம் காவல்துறையினர் தனக்கெதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்பு வந்த செய்தியை படிக்க...
குண்டர் சட்டத்தில் கைதாகிறார் நாஞ்சில் சம்பத்