ஏப்-4ல் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும்: கமல் அறிவிப்பு

முதல் மாநாட்டை திருச்சியில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சியில் ஏப்.4ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் தீவிரம்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனின் அடுத்த பொதுக்கூட்டம் ஏப்.4ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 21-ம் தேதி மதுரையில், நடிகர் கமல் ஹாசன் தனது கட்சி பெயர் மற்றும் கொடியை அறிவித்தார். இக்கூட்டம் மதுரை விவசாய கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் தில்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

அவருடன் இணைந்து தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர். இதில் பேசிய கமல், இனிதான் நிறையக் கடமைகள் இருப்பதாகவும், அரசியல் கூட்டம் என்பது ஒருநாள் கூத்து இல்லை என்றும் கூறினார்.

மேலும் “நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன். இந்தச் சோற்று பருக்கையை தொட்டுப் பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கை விரல் சுடும்” என்று தனது பேச்சில் ஊழலைச் சுட்டி காட்டினார்.

அவரின் அடுத்தகட்ட அரசியல் பயணமாக ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து திருச்சி மாவட்ட நிர்வாகிகளைச் சென்னைக்கு வரவைத்துப் பேசினார். முடிவில், திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தைத் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். ஆட்டோக்களில் பொதுக்கூட்டம் குறித்த பிளக்ஸ்களை ஒட்டியும், துண்டுப் பிரசுரங்களை திருச்சி மாநகரம், ஒன்றியம், வட்டாரம், வட்டம் என அனைத்துப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றனர்.

இக்கூட்டத்தில் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறுகையில், பல்வேறு கட்சிகளுக்கு திருச்சிதான் அரசியலில் திருப்புமுனையை அளித்துள்ளது. இதேபோல, கமல்ஹாசனுக்கும் திருச்சி திருப்புமுனையை அளிக்கும் என்றனர்.

நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும், தனது முதல் மாநாட்டை திருச்சியில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

×Close
×Close