Advertisment

வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை 10 % குறைந்திருக்கிறது : கனிமொழி

இந்தியாவில் வேலைக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் குறைந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. வருத்ததுடன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை 10 % குறைந்திருக்கிறது : கனிமொழி

வேலைக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் குறைந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

Advertisment

விடுதலைப் போராட்ட வீரர், பெண்ணுரிமை, நில மீட்புப் போராளி தோழர். கே.பி. ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ‘சமூகத்தில் சரிபாதி, வேண்டும் சமநீதி’ என்ற கருத்தரங்கம் சுதந்திர தினமாம் ஆகஸ்டு 15 அன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தால் ஏற்பாடு செய்ப்பட்ட இந்நிகழ்வில் மாதர் சங்கத் தலைவர் தோழர் வாசுகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றினார் திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. அவரது உரை வருமாறு:

‘’சமூகத்தில் சரிபாதி வேண்டும் சமநீதி என்ற கருத்தரங்கம் இது.சமூகத்தில் சரிபாதி இல்லை என்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். பெண் சிசுக் கொலை, பெண் குழந்தை வேண்டாம் என்ற மனநிலை ஆகியவற்றால் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. இது எதிர்காலத்தில் பல பிரச்னைகளுக்கு அடிக்கோலாக இருக்கிறது. இதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து வேண்டும் சமநீதி என்று யாரிடம் கேட்கிறோம்? கொடுப்பதற்கு யாரும் இல்லை, எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். என்னுடைய உரிமை என்னுடைய சுதந்திரம் அதை வைத்துக் கொண்டிருப்பவர்கள் யாரும் அதை தரமாட்டார்கள்.

இன்னும் மனிதனை அடிமையாக நடத்தும் பல அநீதிகள் நடக்கின்றன. என் நண்பர் ஒருவர் ஒடிசாவில் ரயிலில் போய் இற்ங்கியதும் அங்கே கேட்டார்களாம், தனி நபராக வேண்டுமா? குடும்பத்தோடு வேண்டுமா என்று. குடும்பம் என்று சொன்னால் 5 ஆயிரம் ரூபாய், தனி நபர் என்றால் 3 ஆயிரம் ரூபாய். அதைக் கொடுத்துவிட்டு அந்த குடும்பத்தை இந்தியாவின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று அடிமையாக வைத்துக் கொள்ளலாம். இன்னும் இதுபோன்ற அடிமை நிலை நீடிக்கிறது. அடிமையாக வைத்திருப்பவர்களிடம் போய் கேட்டால் கிடைக்கப் போவதில்லை. என் சுதந்திரம் என் உரிமை என்று பெண்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு அரசியல்வாதி தான் விட்ட சவாலில் தோற்றுவிட்டார். அதற்கு பதிலாக எதிர்க்கட்சியின் மகளிரணியினர் அவருக்கு வளையலை அனுப்புகிறார்கள். தோற்றுப் போவதன் சின்னம்தான் வளையலா, மகளிரா? இந்த அடிப்படை கூட புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பலர்.

12 வயதில் ஜாதியை எதிர்த்து ஒரு பெண்ணால் பேச முடியும் என்றால் அது ஜானகி அம்மாள் அவர்கள்தான். இந்த சுதந்திரத்துக்கு அவருடைய அர்ப்பணிப்பு எந்த ஆணின் அர்ப்பணிப்பை விட உயர்வானது.

எத்தனை பேருக்கு அந்த துணிச்சல் வரும்? இந்த மண்ணைச் சேர்ந்த எத்தனை பெண்கள் போராடியிருக்கிறார்கள்.

நாட்டின் விடுதலைக்காக தன்னையே தீ வைத்து பலியாக்கிக் கொண்ட குயிலி பற்றி பேசியிருக்கிறோமா? ஆனால் வீரம் என்று வரும்போது பெண்ணுக்கு நிதானத்துடன் கூடிய வீரம். அதை நாம் உணரவேண்டும்.

நீ ஆணா, உன்னால் செய்ய முடியவில்லை என்றால் சேலையைக் கட்டிக் கொள், வளையலைப் போட்டுக் கொள் என்று பேசுவது பெண்ணையே பெண் அவமானப்படுத்துவதுதான். இதிலிருந்தெல்லாம் முதலில் நாம் மீண்டு வரவேண்டும். வழி வழியாக பல விஷயஙக்ள் நமக்குள்ளே திணிக்கப்பட்டிருக்கின்றன. வீரம் என்றால், விவேகம் என்றால், தைரியம் என்றால் அத்தனையும் ஆண் என்று நம்மில் திணிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனத் தடைகளை முதலில் உடைக்க வேண்டியது நம்முடைய கடமை.

பெண்ணுரிமை பேசுகிற எல்லாருமே ஒரு கயிறு வைத்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நிலை வரை பெண்ணுரிமை என்பவர்கள், அதன் பின் அந்த கயிறைப் பிடித்து இழுப்பார்கள். இதற்கு மேல் சரி வராது என்பார்கள். ஆனால் எந்தத் தடையும் இன்றி பெண்ணுரிமை பேசிய ஒரே தலைவர் பெரியார்தான்.

பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தால் அவள் ஆண்களுக்கு காதல் கடிதம் எழுதிவிடுவாள். அதனால் பெண் கல்வி வேண்டாம் என்று பெரியார் காலத்தில் சொல்லப்பட்டது. அதற்கு பெரியார் சொன்னார், ‘பெண்கள் காதல் கடிதம் எழுதினால், ஆண்கள் அதைப் பிரித்துப் படிக்காதீர்கள், பதில் எழுதாதீர்கள், பதில் எழுதினால் நீங்களும் தண்டனைக்கு உள்ளாவீர்கள்’ என்று ஏன் நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று கேட்டவர் பெரியார்.

பெண் விடுதலைக்குத் தடையாக எது இருந்தாலும் அதை தூக்கி எறி, தாய்மை தடையாக இருந்தால் அதையும் தூக்கி எறி என்று சொன்ன ஒரே தலைவர் பெரியார்தான்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்று தலைவர் கலைஞர் சட்டம் கொண்டுவந்தார். ஆனால், சொத்தில் எனக்கும் சம பங்கு இருக்கிறது என்று கேட்கிற மன தைரியம், மன உறுதி எத்தனை பெண்களுக்கு இருக்கிறது? பெண்ணுக்கு திருமணத்தின்போது வரதட்சணை கொடுத்து அவளை பிரித்து அனுப்பிவிட்டு, அவளது உரிமையை கொடுக்காத நிலைமை இன்று நாட்டிலே இருக்கிறது.

பெண்ணுக்காக ஒரு சட்டம் இயற்றப்படும்போது.,.. ‘இதில் தவறு செய்யாதவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்று அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், ஏன் நீதிமன்றமும் சொல்கிறது.வரதட்சணை தடுப்பு சட்டத்தில் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று உச்சநீதிமன்றமே சொல்கிறது. ஆனால், இன்னமும் நம் நாட்டில் வரதட்சணைக் கொடுமையால் அப்பாவிப் பெண்கள் உயிரிழந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதுபற்றிக் கவலை இல்லை. மரண தண்டனை என்பது ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினருக்குத்தான் நிறைவேற்றப்படுகிறது. அதுபற்றி யாருக்கும் கவலை இல்லை.

இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்திலே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. பெண் உரிமை படிப்படியாக வளர்ந்துகொண்டிருக்கிறது, பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார்கள், சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் 2005-லே இந்தியாவிலே வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்களின் சதவிகிதம் 37. இன்று வேலைக்கு செல்கிறவர்களின் எண்ணிக்கை 27. பத்து சதவிகிதம் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

பல நாடுகளில் அது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நம் நாட்டில் குறைந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவோடு ஒரு சில நாடுகளில் மட்டும்தான் குறைந்துகொண்டிருக்கிறது.

கிராமப்புறங்களிலே விவசாயம் சார்ந்த வேலைகளை பலபெண்கள் செய்துகொண்டிருந்தார்கள். இன்று விவசாயமே குறைந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலே விவசாயத்தை கவனிக்க யாரும் இல்லை. தமிழக விவசாயிகள் மாதக்கணக்கில் டெல்லியிலே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருக்கும் யாரும் கேட்கவில்லை. கிராமங்களில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. நகர்ப்புறங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்கள் வேலைக்கு செல்வதை குறைத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதுதான் நமது சராசரி மனநிலை. நம் மனைவி,நம் சகோதரி, நம் மகள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்ற என்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம், படித்துவிட்டு வீட்டில்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் பாதுகாப்பு. வெளியே போனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இத்தனை விஷயங்களை எத்தனை ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறோம், இன்னும் எத்தனை ஆண்டுகள் பேசப் போகிறோம்?

ஏனென்றால் சட்டங்கள் இயற்றக் கூடிய இடத்தில் பெண்கள் இல்லை. உள்ளாட்சியிலே பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வந்தது. அதுவே அரசியல் கட்சிகளுக்கு பெரிய அடி. இப்போது ஐம்பது சதவிகிதம் பெற்றுவிட்டார்கள். அதையே சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் செய்துவிடக் கூடாது என்று தெளிவாக இருக்கிறார்கள். எல்லா கட்சிகளும் ஆதரிக்கக் கூடிய ஒன்று பெண்களுக்கான இட ஒதுக்கீடு. ஆனால் எந்த கட்சியுமே ஆதரிக்காத ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றுவார்கள். ஆனால் எல்லா கட்சிகளும் ஆதரிக்கக் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவே இல்லை. சட்டமியற்றும் இடத்தில் பெண்கள் இல்லாத நிலையில் சட்டங்கள் பெண்ணுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

நிர்பயா பற்றி இந்த நாடே பற்றி எரிந்தது. அதேநேரத்தில் வட இந்தியாவில் சிறு பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களை யாரும் கவனிக்கவில்லை. எல்லா சமூகத்திலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

நாம் நமக்குள் கேள்வி கேட்காதவரை, பெண்கள் கேள்வி கேட்டால் சமூகத்தின் அத்தனை தளங்களும் உடைந்துவிடும் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நம் நாடு சுதந்திரம் பெற்ற நாடு. வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறினால் நிர்வாகக் கட்டமைப்பே குலைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர்கள் போனதும் சில இடங்களில் சிதைந்து உடைந்தது ஆனால் மீண்டும் கட்டியெழுப்பினோம். அதுபோலத்தான் பெண்கள் கேள்வி கேட்போம். அதன் மூலம் சமூகத்தின் அத்தனை தளஙக்ளும் உடையட்டும். சிதையட்டும். மீண்டும் புதிய சமூகத்தைக் கட்டி எழுப்புவோம்’’

இவ்வாறு கனிமொழி எம்.பி. பெசினார்.

Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment