கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு 59 வேட்பு மனுக்கள் நேற்று வரை த்தாக்கல் செய்யப்பட்டது.
இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலணை நடைபெற்றது. அப்போது மொத்தம் 41 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனு முறைப்படி இல்லை என்பதால், அதனை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர். பின்னர் அண்ணாமலையின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளிக்க வந்தனர்.
அப்போது விதிமுறைகளை மீறி வேட்பு மனுத்தாக்கல் செய்த அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.
இது குறித்து பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் அண்ணாமலை வேட்புமனு மீது நிறைய பிரச்சனைகள் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி மிகப்பெரிய தவறு செய்துள்ளனர் என்றார்.
அண்ணாமலையின் பிரமாண பத்திரம் நீதிமன்றங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் முத்திரை தாளில் கொடுத்துள்ளார் எனவும் இது முற்றிலும் தவறு எனவும் கூறினார். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதையெல்லாம் கவனிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது தவறு என்றார். மேலும் ஒருதலைப் பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
பின்னர் பேசிய நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் விஜயராகவன், “நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது சட்டப்படி தவறு எனவும் அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒருவேளை அண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டாலும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி சந்தித்து விட்டு வந்தவர்கள், இன்று மாலை அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகம் அண்ணாமலையின் வேட்புமனுவை மாவட்டம் புதிதாக பதிவேற்றம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"