புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடியை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு உறுப்பினர் டி.முருகன் தாக்கல் செய்த பொது நல மனுவில், ’’யூனியன் பிரதேசங்களுக்கு துணைநிலை ஆளுனரை நியமிக்க அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, அரசு பணத்தை வீணாக்கவே துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுவது தேவையில்லை.
அரசியலமைப்பு சட்டத்தை மீறி புதுச்சேரி ஆளுநர் கிரன்பேடி செயல்படுகிறார் என்பதால் அவரை திரும்பபெற மத்திய அரசுக்கு உத்ரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். மேலும் அவர் மனுவில், அரசு நிர்வாகத்தில் தேவையில்லாமல் தலையிடு என்பது துணை நிலை ஆளுநர் கிரன்பேடி எடுத்துக்கொண்ட பதவி பிரமானத்தை மீறும் வகையில் செயல்படுவதாகவும்; மருத்துவ மாணவர் சேர்க்கை, பசுமை தீர்ப்பாய வழக்கு, அதிகாரி மாற்றம் செய்யும் தலைமை செயலாளர் உத்தரவு ஆகியவற்றில் தலையிட்டு அரசியலமைப்பு விதிகளையும், பதவிப்பிரமாண விதிகளையும் மீறியிருக்கிறார்.
அங்கீகரிக்கப்பட்ட ஆளுனர் மாளிகையான ராஜ் நிவாசில் ஆளுனருக்கான தனிச்செயலாளரும், 68 பணியாளர்களும் அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியில் உள்ள நிலையில், தனக்கு தேவையான ஆட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கூடுதலாக பணியாளர்களை நியமித்து விதிகளை மீறியுள்ளதாக மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உடனடியாக துணை நிலை ஆளுநர் உடனடியாக திரும்ப பெற உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ’’தலைமை நீதிபதி அலுவல் ரீதியாக ஆளுநர் சந்திக்க நேரிடும் என்பதால், இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரித்தால் சரியாக இருக்கும்’’ என தெரிவித்து வழக்கை நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என கூறி வழக்கை மாற்றி உத்தரவிட்டார்.