திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க. முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு.
இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த ஷீபாராணி என்ற பெண் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘‘எனது அப்பா, மு.க. முத்து. எனது தாயாரை 1988 ஆம் ஆண்டில் இந்து முறைப்படி, திருமணம் செய்து கொண்டார். பின்னர், கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த இருவருக்கும், கடந்த 1991 ஆம் ஆண்டில், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் மகளாக நான் பிறந்தேன். அதன் பிறகு, சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள வீட்டில் அப்பா, அம்மாவுடன் நான் வசித்து வந்தேன். அப்போது, அங்கு வந்த எனது அப்பாவின் மூத்த மனைவியின் மகன் அறிவுநிதி மற்றும் அவருடன் வந்த 10 ரவுடிகள், என்னையும், எனது அம்மாவையும் தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த பொருட்களை அள்ளி வெளியே வீசிவிட்டு, அந்த வீட்டையும் அபகரித்து கொண்டார். இதையடுத்து, நானும், எனது அம்மாவும், ஆவடியில் உள்ள தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருந்தோம். கடந்த 1997 ஆம் ஆண்டு எனது அப்பாவை, சென்னை, பாலவாக்கத்தில் வைத்து நானும், அம்மாவும் சந்தித்தோம் அப்போதும், அங்கு வந்த அறிவுநிதி, எங்களை தாக்கிவிட்டு சென்றார். அதன் பிறகு, என் அப்பாவை சந்திக்க விடாமல், அறிவுநிதி தடுத்து வந்தார்.
இப்போது, நாங்கள் பெரிதும் கஷ்டப்பட்டு வருகிறோம். அதன்பின்னர், 2009 முதல் 2014 ஆண்டு கால கட்டத்தில், என் அப்பாவை பார்க்க வில்லை. இதுதொடர்பாக எங்கு புகார் செய்தாலும் நியாயம் கிடைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில், திருவாரூரில் வைத்து என் அப்பாவை சந்தித்தேன். அப்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதை அறிந்ததும், அறிவுநிதி என் அப்பாவை, சென்னைக்கு அழைத்து வந்து விட்டார். அதன் பின்னர், கடந்த மூன்று ஆண்டுகளாக என் அப்பாவை பார்க்க முடியவில்லை. அவரை, அவரது மகன் அறிவுநிதி சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். இது தொடர்பாக, சென்ற ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி, கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அறிவுநிதியிடம் சட்டவிரோத காவலில் இருக்கும் என் அப்பா மு.க. முத்துவை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.’’
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி செல்வம், சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அறிவுநிதிக்காக, அவரது அப்பா மு.க. முத்து சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''தான் சட்டவிரோத காவலில் இருப்பதாக கூறி, மனுதாரர் ஷீபாராணி என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அப்பா, மகனுடன் தங்கியிருப்பது சட்டவிரோத காவல் கிடையாது. சமுதாயத்தில் தனக்குள்ள பெயரை களங்கப்படுத்தும் விதமாக மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். நான், கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவன். மனுதாரர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு, நான் நடத்தி வந்த இசைக்குழுவில், மனுதாரரின் அம்மா, சில மாதங்கள் வரை வேலை செய்து வந்தார். அதன்பிறகு, அவர் எங்கு சென்றார் என்பது எனக்கு தெரியாது.
நான் சிவகாமி சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலம் அறிவுநிதி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுடன் கடந்த 50 ஆண்டு காலமாக நான் வாழ்ந்து வருகிறேன். சென்னை கொட்டிவாக்கம், வெங்கடேஷ்வரா நகரில் தற்போது இருந்து வருகிறேன். எனது மகன் அறிவுநிதி பாதுகாப்பில் இருக்கிறேன். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு போல, நான் அவரது அம்மாவை திருமணம் செய்து கொள்ளவில்லை. மனுதாரரை எந்த சூழ்நிலையிலும் நான் பார்த்தது கிடையாது. மனுதாரர் என்னை பார்க்க முடியாத அளவுக்கு அறிவுநிதி தடுத்ததாக, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இது முற்றிலும் பொய்யானது, அறிவுநிதி எந்த நிலையிலும் தவறான செயலில் ஈடுபட்டது கிடையாது. காச நோயால் பாதிக்கப்பட்ட நான், கடந்த 10 ஆண்டுகளாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 10 ஆண்டாக, எனது வெளியில் நடமாடியது கிடையாது. மற்றவர் துணையில்லாமல், என்னால் வெளியே செல்ல முடியாது. மருத்துவர் ஆலோசனையின் பேரில், அறிவுநிதி பாதுகாப்பில், கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து வருகிறேன். எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராக விலக்கு அளித்திட வேண்டும். மனுதாரர் ஷீபாராணியையோ, அவரது அம்மாவையோ, எந்த நிலையிலும், என் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்தது கிடையாது. எனது மகன் அறிவுநிதி பாதுகாப்பில், நான் சிகிச்சை பெற்று வருகிறேன். சமுதாயத்தில் எனக்குள்ள பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அபராதம் விதித்து இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.''
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஷீபாராணி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்