சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவாகாரத்தில், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.
சேலம் மாவட்டம், அப்பம்ம சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். சகோதரர்கள் இவர்கள் இருவருக்கும் அப்பகுதியில் சுமார் ஆறரை ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பா.ஜ.க இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வருகறது.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை சார்பில், சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வந்த எழுதப்படிக்கத் தெரியாத முதியவர்களான விவசாயிகள் இருவரையும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக சம்மன் அனுப்பிய, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ரித்தேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பிரபா, சந்திரன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரவீனா அமலாக்கத் துறை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஊடகங்கள் வழியாக வெளியே தெரியவந்ததை அடுத்து, அமலாக்கத்துறை அப்பாவி விவசாயிகளுக்கு சாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பியதற்கு, சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த புகாரின் மீது விசாரணை நடத்த டி.ஜி.பி சங்கர் ஜிவால் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீசார், ஏழை மற்றும் எளிய படிக்க தெரியாத விவசாயிகளான கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு, எந்த அடிப்படையில் ‘சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது? விவசாயிக்கு சாதி பெயரை குறிப்பிட்டு ஏன் சம்மன் அனுப்ப வேண்டும் என்பது குறித்து திங்கள்கிழமை (01.01.2024) விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீசார் 2 விவசாயிகளுக்கு ஆதரவாக புகார் அளித்த வழக்கறிஞர் பிரவினாவிற்கு சம்மன் அனுப்பி, அவரிடம் திங்கள்கிழமை மாலை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, வழக்கறிஞர் பிரவினா ஏழை விவசாயிகளுக்கு சாதி பெயரைக் கூறி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் அளித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். இதைதொடர்ந்து, ஓரிரு நாளில் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“