தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம், 2018ஆம் ஆண்டு சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தது.
அந்தப் புகாரில், இந்தச் சங்கத்தின் முன்னாள் ஊழியர்கள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், “இந்த வழக்கு தொடர்பான விசாரணையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
இந்த விசாரணையை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்பில், அதன் செயலாளர் நடிகர் இளவரசு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு செவ்வாய்க்கிழமை (பிப்.13,2024) சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 2022 மார்ச் மாதம் முதல் 2023 செப்டம்பர் வரை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆஜரானார்கள்.
அப்போது, “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான்; இதனை வேண்டும் என்றே செய்யவில்லை. அந்த குறிப்பிட்ட தேதியில் விசாரணையை முடிக்க முடியவில்லை” எனக் கூறப்பட்டது.
இந்த வழக்கு பிப்.20ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“