Advertisment

திருச்சி காவிரி-கொள்ளிடத்தில் வெள்ளம்; உயர் அழுத்த மின்கம்பம் சாய்ந்தது

ஆற்றோரத்தில் அமைந்துள்ள வீடுகளைத் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஒகேனக்கல்-நாட்றாம்பாளையம் சாலையில், நாடார் கொட்டாய் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

author-image
WebDesk
New Update
The power towers in the middle of the Trichy Kollid River collapsed into the river in the middle of the night

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் நடுவே இருந்த  மின் கோபுரங்கள் நள்ளிரவு ஆற்றுக்குள் சரிந்து விழுந்தன.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 2 லட்சம் கனஅடியைக் கடந்தது. மேட்டூர் அணையிலிருந்து 2-வதுநாளாக விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் இரவுவிநாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1.65 லட்சம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.

Advertisment

ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் ஆற்றோரத்தில் அமைந்துள்ள வீடுகளைத் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஒகேனக்கல்-நாட்றாம்பாளையம் சாலையில், நாடார் கொட்டாய் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் நேற்று மாலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒகேனக்கல், ஊட்டமலை பகுதிகளில் 6 அவசரகால தங்கும் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, காவிரிக் கரையோரப் பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. தரமான பகுதியில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் கூறியதாவது:- மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் சுமார் 1.70 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதையொட்டி, அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய நகராட்சிகள், பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் சுமார் 308 வீடுகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அனைத்து இடங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 9 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு 5 மாத கர்ப்பணியும் பாதுகாப்பாக அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வெள்ளத்தால் சூழ்ந்த பகுதியில் பொதுமக்கள், இளைஞர்கள் செல்ல இயலாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமாரபாளையத்தில் உள்ள தரைபாலத்தில் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை காவிரி வெள்ளத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காடச்சநல்லூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 150 பயனாளிகளுக்கு இடம் அடையாளம் காணப்பட்டு விரைவில் பட்டா வழங்கப்பட உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் 585 குடியிருப்புகள் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

இக்குடியிருப்புகளில் தங்குவதற்கு 380 பயனாளிகள் சம்மந்தம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நிரந்தர வீடு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீயணைப்பு துறையினர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்.

மேலும், குமாரபாளையம் நகராட்சி, ஜே.கே.கே நடராஜா திருமண மண்டபம், ஸ்ரீ ராஜேஸ்வரி திருமண மண்டபம், ஸ்ரீ அய்யப்ப சேவா மண்டபம் உள்ளிட்ட நிவாரண முகாம்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபம் மற்றும் செங்குந்தர் திருமண மண்படம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அவர்களுக்கு உணவு, நிவாரண பொருட்கள் ஆகியவை வழங்கப்படுவது குறித்தும் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் குறித்தும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

அதேபோல், கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தில் குடியிருப்புகளை காவிரி வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். கே.பேட்டை அருகே தற்காலிக பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றது.இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 10 கி.மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புகழுர் தவிட்டுப்பாளையத்தில் 2 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன.

முன்னதாக, திருச்சி கொள்ளிடம் ஆற்றின் நடுவே இருந்த  மின் கோபுரங்கள் நள்ளிரவு ஆற்றுக்குள் சரிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதுமில்லை. மேலும், இரண்டாவது ஒரு உயிர் அழுத்த மின் கோபுரமும் கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்து உள்ளது. 
மின் கோபுரம் சரிந்து விழுந்தும், மின் கம்பி அறுந்து விழுந்தும், விபத்து ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும், விபத்தை தடுக்கும் நோக்கத்துடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள திருவானைக்காவல் பகுதியையும், வடகரையில் உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதியையும் இணைக்கும் திருச்சி கொள்ளிடம் ஆற்று நேப்பியர் வடிவ மேம்பாலத்தில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment