திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓர பாகூர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “சாத்தனூர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாக அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தென்பெண்ணையாற்றின் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. மேலும் தென்பெண்னை ஆற்றின் அமைந்துள்ள புதுவை கிராமங்களான நெட்டப்பாக்கம், பண்ட சோழநல்லூர், வடுகுப்பம், ஏம்பலம், நத்தமேடு. கம்பளிகாரன்குப்பம், மணமேடு, குருவிநத்தம், பரிக்கல்பட்டு, சொரியங்குப்பம், கொமந்தமேடு, உச்சிமேடு, முதலிய பகுதி வாழ் மக்கள் கரையோரம் உள்ள தமது உடமைகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றில் இறங்கவோ ஆற்றில் குளிக்கவோ ஆற்றங்கரையை கடக்கவோ கூடாது என்றும் அதனை மீறுவோர் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“