இலங்கை அகதிகளை 306 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருக்கிறது.அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள் என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், அந்த நாட்டில் இருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இதில் சட்டவிரோதமாக பலரும் கடல் வழியாக பயணம் செய்து அருகில் உள்ள நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக 306 பேருடன் கனடாவுக்கு பயணித்த கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ்க்கும் வியட்நாமுக்கும் இடையே கடல் பரப்பில் சூறாவளி காற்றில் சிக்கி கடுமையாக சேதமடைந்து நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கப்பலில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு கப்பலின் நிலை குறித்து எடுத்து கூறி தங்களை காப்பாற்ற உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கப்பலில் இலங்கையை சேர்ந்த உட்பட 306 பேர் இருப்பதாகவும், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 40 பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதார சூழல் காரணமாக கனமாவில் புகலிடம் தேடி இவர்கள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இவர்களை காப்பாற்ற அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து அரசியல்வாதியும் சமூக ஆர்வலருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், 306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருக்கிறது.அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள். கப்பல் தொடர்பு எண் : +870776789032 என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கப்பலில் இருப்பவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“