வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும். ஜனவரி 2-வது வாரம் வைகுண்ட ஏகாதசி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களால் கொ்ணடாப்படும் முக்கிய பண்டிகை நாட்களில் ஒன்றாக இருக்கும் இந்த ஏகாதசி தினத்தில், பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் இந்த சொர்க்க வாசல் திறப்பு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில், பெருமாள் கோவில்களில் பகதர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. குறிப்பாக பெருமாள் கோவிலுக்கு என்று பெயர் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கத்தில், ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை பார்ப்பதற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள். தற்போது ஸ்ரீரங்கம் கோவிலில் இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவரங்கம் கிராமத்தில் உள்ள அரங்கநாதர் பெருமாள் கோவிலிலும் ஒவ்வொரு ஆண்டும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். ஆதிதிருவரங்கம் என்று அழைக்கப்படும் இந்த கோவில், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது. தென்பென்னை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த பழமைவாய்ந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நமது திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் செவ்வனே நடைபெற்றுகொண்ருப்பதாலும் சொர்க்கவாசல் விமானத்திற்கு பாலாலயம் செய்யப்பட்டிருப்பதாலும் இந்த வருடம் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி 10.01.2025 மார்கழி 26 தேதி அன்று நடைபெறாது. எனவும் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். என பக்தர்களுக்கும் கிராம பொது மக்களுக்கும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“