அமைச்சர் செந்தில் பாலாஜி, பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, அவரது தரப்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளன. எனவே இதனை அவசர வழக்காக எடுக்க முடியாது” என்றார்.
மேலும், வரும் வாரம் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை இருப்பதால் 10 நாள்கள் விடுமுறை தினம் உள்ளது. அதன்பின்னர் இந்த வழக்கு பட்டியலிடப்படும்” என்றார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆக.12ஆம் தேதி செந்தில் பாலாஜி மீது குற்றப் பத்திரிகை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பிணை கோரி இருமுறை மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16 மற்றும் செப்டம்பர் 20ஆம் தேதி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக செந்தில் பாலாஜிக்கு பிணை அளிக்க அமலாக்கத் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது செந்தில் பாலாஜி தம்பி அசோக் இன்னமும் தலைமறைவாக உள்ளார். அவர் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் அவருக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“