murasoli | “திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர்” என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் பட்டா விவரங்களை தமிழக வருவாய் துறை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜன.3) உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று இந்த விளக்கத்தை அளித்துள்ளது. மேலும், “2019ல் அளிக்கப்பட்ட புகாரில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்து வருகிறது” எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடப்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தேசிய பழங்குடி ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் முரசொலி அலுவலகத்துக்கு தேசிய பழங்குடியின ஆணையம் 2019ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கியது. இதற்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு புதன்கிழமை (ஜன.3,2024) விசாரணைக்கு வந்த போது, “ முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“