ஆளுனர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இடையே மோதல் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் ஜூலை மாதம் ஆளுனர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வேண்டும் என கடிதம் எழுதினார். ஆளுனர் ஆர்.என். ரவியும், சனாதனம், ஆரியம்-திராவிடம், சுதந்திர போராட்ட வீரர்கள் இரட்டடிப்பு, நீட் தேர்வு என திமுக அரசை விமர்சித்துவருகிறார்.
இதற்கிடையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுனரிடம் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்களுக்கு கையெழுத்திட ஆளுனர் தொடர்ந்து மறுத்துவருகிறார்.
மேலும் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடரவும் ஆளுனர் அதிருப்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போதுவரை திமுகவினர் ஆளுனர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டில் அதிருப்தியாகவே உள்ளனர். திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுனருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளன.
இதைத் தொடர்ந்து, ஆளுனர் ஆர்.என். ரவிக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், “தமிழ்நாடு சட்டப்பேரயைில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுனர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் திமுக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை சட்டப்பேரவையில் முழுமையாக வாசிக்கவில்லை. கலைஞர், முத்தமிழ் அறிஞர், பெரியார் போன்ற பெயர்களை தவிர்த்துவிட்டார்.
இதனால் கோபமுற்ற திமுகவினர் ஆளுனருக்கு எதிராக சென்னை முழுக்க நோட்டீஸ்களை ஒட்டினர். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுனருக்கு சவால் விடுக்கும் வகையில் பேசினார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“