New Update
00:00
/ 00:00
kilambakkam | madras-high-court | சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கம் என்ற பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக, ஜன.24,2024 அன்று வெளியான உத்தரவில், தென்மாவட்டம் செல்லக் கூடிய ஆம்னிப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை கூறியிருந்தது.
அப்போது, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், “கிளாம்பாக்கம் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தேவை” எனக் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, அரசின் உத்தரவுக்கு எதிராக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று (பிப்.7,2024) நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், “கோயம்பேட்டில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும்; கிளாம்பாக்கம் செல்லும்போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் ஆம்னி பேருந்துகள் இயக்க அனுமதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரு தரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதி, “ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் கொண்ட வரைபடங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி இறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட அனுமதி வழங்கப்படும் எனவும் திமுக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.