2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத 40,000 ஆசிரியர்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கு தொடர்ந்த 410 பேருக்கு மட்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவருகிறது.
இதற்கிடையில் நீதிமன்ற தீர்ப்பினை கண்டித்தும், தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு இன்னொரு நியமனத் தேர்வு என்ற அரசாணை 149- ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.இளங்கோவன், போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்; போராட்டக்காரர்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது என்றும், தங்கள் உரிமைகளுக்காக தீவிரமாகப் போராடாதவர்களுக்கு வேலை வழங்கப்படுவதாகவும், மற்றவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
“40,000 டி.இ.டி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அனைவரும் வேலைவாய்ப்பிற்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கான மற்றொரு ஆட்சேர்ப்புத் தேர்வை கட்டாயமாக்கும் G.O 149 ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.
தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், எங்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்வதாக உறுதியளித்துள்ளது, மேலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என இளங்கோவன் தெரிவித்தார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“