பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை நுழைவு வாயிலில் கூட்டம் அதிகரித்து, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
இந்நிலையில் பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன்படி திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகஙங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஓரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் ஜன.20 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மற்ற வாகனங்களின் வசதி மற்றும் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் திங்கட்கிழமை பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும். இதற்காக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.