bus-strike | tiruchirappalli | போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், "6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த பேச்சுவார்த்தையில், "எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது.
முழுக்க முழுக்க நியாயமற்ற பதில் இது. அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாத பதில் இது. ஊழியர்களின் கோரிக்கைகள் எதன் மீதும் இப்போது முடிவு சொல்ல முடியாது என்று அரசு தரப்பும், அமைச்சரும் சொன்னார்கள். அதனை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்.
எந்த பொதுத்துறை தொழிலாளிக்கும் இழைக்கப்படாத அநீதியை போக்குவரத்து தொழிலாளிகளுக்கு இந்த அரசு இழைத்துக்கொண்டே இருக்கிறது. பஞ்ச படியை பொறுத்தவரை எங்களுக்கு அதிகரித்து தர வேண்டும் என்று கேட்கவில்லை, எங்களுக்கு தரவேண்டிய பாக்கியை தான் கேட்கிறோம்.
எங்களுக்கு அரசு தரவேண்டிய கடன். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம், பஞ்ச படி பாக்கியை மட்டும் கொடுக்க வேண்டும் என்பதேயே இன்றைய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினோம். இதையும் பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார்கள்.
எதுவும் செய்ய முடியாது என முடிவெடுத்து மிகப்பெரிய தவறை அரசு இழைக்கிறது. எனவே, வேலைநிறுத்தத்தை திரும்ப பெற முடியாது. திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். எங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆறு கோரிக்கையில் இருந்து ஒரு கோரிக்கைக்கு வந்தபின்னும்கூட அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். அமைச்சர் எங்களை அழைத்து பேச தயாராக இருந்தால் நாங்களும் தயார். வேலைநிறுத்தம் என்ற தவிர்க்க முடியாத சூழலுக்கு எங்களை அரசு தள்ளியுள்ளது" என தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மாலை முதல் திருச்சி, மதுரை, தேனி, ஈரோடு, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து இயக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
திருச்சி பேருந்து முனையத்திலும் தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை பணிமனைக்கு கொண்டு வந்துள்ளனர். திருச்சியில் இருந்து சென்னை திருச்சியில் இருந்து கோவை திருச்சியில் இருந்து நெல்லை செல்லக்கூடிய தொலைதூரப் பேருந்துகள் டெப்போக்குள் வரிசையாக நிறுத்தப்பட்டு வருகின்றன.
தற்போதே வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம் பணிமனையில் உள்ள அரசு அதிகாரிகள், டபுள் ஷிப்ட் பார்க்கும் ஊழியர்களை அழைத்து இன்று ஒரு ஷிப்ட் போதும் என்றும், நாளை போக்குவரத்து ஸ்ட்ரைக்கை முறியடிக்கும் வகையில், நாளை இன்னொரு ஷிப்ட்டுக்க வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
எப்படி இருப்பினும் இன்று இரவு 12 மணிக்கு பிறகு எந்த பேருந்தும் ஓடாது என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கறாராக அறிவித்துள்ளதால் சென்னை செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“