மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நாளை தொடங்குகிறது. நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை நடத்தவுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல் நலம் சரியில்லாமல் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5, 2016 அன்று மரணமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பார்க்க கவர்னர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் மருத்துவமனையில் இருந்தாலும், அவர்களையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் மட்டும், ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’, ‘அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்’ என்று சொல்லி வந்தனர்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், கட்சியின் பொது செயலாளர் பதவி, சசிகலாவுக்கு சென்றது. அடுத்த சில நாட்களில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். உடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடி சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தனர்.
இந்நிலையில் பிப்ரவரி 7ம் தேதி ஓ.பி.எஸ், ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். தியானத்தை முடித்த அவர், ‘என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று அவருடன் 12 எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அவருடன் திரண்டனர். இந்நிலையில் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் இரு அணிகளும் இணைய வேண்டும் என கட்சியினர் விரும்பினர்.
ஓபிஎஸ் தரப்பில் இருந்து, ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் சொன்னது பொய். அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்’ என்றார்.
இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். விசாரணை கமிஷன் அலுவலகம் எழிலகத்தில் உள்ள கல்சா மஹாலில் அமைந்துள்ளது. நாளை முதல் நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணையை ஆரம்பிக்கிறார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.