சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், 2015ஆம் ஆண்டு நாமக்கல்லில் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர், கல்லூரியில் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியை காதலித்துள்ளார். இதை ஏற்கமுடியாத சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர், திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து, கோகுல்ராஜ் உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இதில் 2 பேர் இறந்த நிலையில், ஏனைய 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து நிலையில், பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் 4 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) தீர்ப்பு வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“