வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த வாரம் புயலாக உருவானது. இந்த புயலுக்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டது. கடந்த 9-ம் தேதி மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, பட்டினம்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இந்தநிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் புயலால் கடும் சேதமடைந்தது. மரப்பாலம் முழுவதும் மணல் சூழ்ந்து காணப்பட்டன. மரக்கட்டைகள் உடைந்தன. இந்தநிலையில் மரப்பாலத்தை சீர்செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பருவமழை முடிந்தவுடன் பார்வையிடும் தளமும் சரி செய்யப்பட்டு விரைவில் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 263 மீட்டர் நீளத்தில் கடல் அருகே வரை மாற்றுத்திறனாளிகள், வயது மூத்தவர்களுக்கான நிரந்தர மரப்பாலம் தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் 27-ம் தேதி அமைக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில், புயல் காரணமாக வீசிய பலத்த காற்று, கடல் அலைகளால் பாலம் கட்டப்பட்ட ஒரு வாரத்தில் சேதமடைந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/