ராஜஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆய்வாளர் பெரிய பாண்டியன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்! இரு மாதங்களுக்கு முன்பே மதுரவாயலில் பொறுப்பேற்றார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ்குமார் (வயது 37) சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 16-ம் தேதி மதியம் இந்தக் கடையை துளையிட்டு உள்ளே இறங்கிய நபர்கள், நகைக்களையில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைதாகிய நிலையில், மேலும் சிலர் ராஜஸ்தானுக்கு தப்பியுள்ளதாக தெரிய வந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் இன்று காலை கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர்.'
அப்போது கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார்.
கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட பெரிய பாண்டியனுக்கு வயது, 48. இவர் சென்னை, ஆவடி, வசந்தம் நகர், நேரு தெருவில் 4-ம் எண் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். மூத்த மகன், சென்னை லயோலா கல்லூரியில் படிக்கிறார். இளைய மகன், 8-ம் வகுப்பு படிக்கிறான்.
பெரியபாண்டியனின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா, தேவர்குளம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மூவிருந்தவல்லி-சாலைப்புதூர் ஆகும். மிக பிற்பட்ட சமூகமான மறவர் சமூகத்தை சேர்ந்தவர் இவர். இவரது தந்தை பெயர் செல்வராஜ். பி.எஸ்சி பட்டதாரியான பெரிய பாண்டியன், கடந்த 2000-மாவது ஆண்டு மே மாதம் சப் இன்ஸ்பெக்டராக தமிழக போலீஸ் துறையில் இணைந்தார்.
பெரியபாண்டியன், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். கடந்த அக்டோபர் 10-ம் தேதிதான் சென்னை, டி-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றிருக்கிறார். அங்கு பணியில் சேர்ந்து இரு மாதங்களில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் அவர் பலியாகியிருக்கிறார்.
அண்மையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெளிமாநில கொள்ளையர்களை தமிழக போலீஸார் உயிரை பணயம் வைத்து பிடிப்பது சம்பந்தமான கதைதான். அந்தக் கதை, கொடூரமான நிகழ்வாக நிஜமாகியிருப்பதாக போலீஸார் வருத்தம் தோய பேசுகிறார்கள். ராஜஸ்தான் போலீஸாரின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிய வருகிறது.