சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரயில், மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது. பின்னர் பணம் இருந்த பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்தபோது, மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்த கொள்ளை தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையர்கள் பற்றிய ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் ஓராண்டு ஓடியது. சிபிசிஐடியில் அதிகாரிகள் மாறினர். அம்ரேஷ் புஜாரி புதிய ஏடிஜிபியாக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அவரது உத்தரவில் இந்த வழக்கு மீண்டும் வேகமெடுத்தது.
அதன்படி இஸ்ரோவுக்கு தகவல் கொடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் உதவி கோரினர். குறிப்பிட்ட நாள் நேரம் குறித்து தகவல் கொடுத்து அதற்கான படங்களை கேட்டனர். இதன் மூலம் ரயில் குறிப்பாக எந்த இடத்தில் பெட்டியின் மேற்கூரை துளையிடப்பட்டது, எந்த இடத்தில் பணப்பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது, எதில் கொண்டுபோகப்பட்டது என்பன உள்ளிட்ட துல்லியமான படங்களை பெற முடியும்.
இஸ்ரோ உதவியுடன் செயற்கை கோள் படம் கிடைத்தவுடன், போலீஸாருக்கு குறிப்பிட்ட எந்த இடத்தில் கொள்ளை அடிக்கப்பட்டது என்ற துப்பு கிடைத்தது. அதன் பின்னர் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இயக்கப்பட்ட செல்போன் எண்களை சேகரித்தனர். இதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட எண்கள் கிடைத்தன. அவைகளை ஆராய்ந்தபோது அவை மத்திய பிரதேசம், பீஹார் மாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரியவந்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில் மத்திய பிரதேச மாநில போலீஸார் மூலம் சில தகவல்களை சேகரிக்க முடிந்தது. அதில் மத்தியபிரதேசம் குணா மாவட்டத்தை சேர்ந்த மோஹர்சிங் என்ற கொள்ளைக் கூட்டத்தலைவனின் ஆட்கள் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாரின் தீவிர விசாரணையில் மோஹர்சிங்கின் கூட்டாளிகள் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட மத்திய பிரதேஷத்தை சேர்ந்த தினேஷ் (38), ரோஹன் பார்த்தி (29) இருவரும் சென்னைக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை வந்தவர்களை நேற்றிரவு சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோஹர்சிங் தலைமையில் இக்குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டனர். மொத்தம் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
குற்றம் நடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி இரவு ரயில் சின்னசேலத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி செல்லும்போது மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்த இவர்கள் மேற்கூரையை வெட்டி எடுத்து இரண்டு பேர் மட்டும் உள்ளே இறங்கி பணக்கட்டுகளை எடுத்துக்கொடுக்க அதை லுங்கியில் முடிந்துக்கொண்டு கூரையில் அமர்ந்தப்படி பயணம் செய்துள்ளனர்.
ரயில் விருத்தாச்சலம் வந்தபோது அங்கு தயாராக இருந்த மற்ற கூட்டாளிகளிடம் பணக்கட்டுகளை சுற்றி வைத்திருந்த லுங்கியை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். மோஹர்சிங் மற்ற கூட்டாளிகள் வேறு வழக்கில் மத்திய பிரதேசத்தில் சிறையில் இருப்பதாக பிடிபட்டவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் அவர்களை கைது செய்து சென்னை அழைத்துவர உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.