சொந்த மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல்வாதியாக வலம் வருவதற்காகவே சிறு வயதில் இருந்து திருட்டில் ஈடுபட்டதாக நாதூராம் தெரிவித்துள்ளான்.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக கொள்ளையன் நாதுராமைத் தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை சுற்றிவளைத்து பிடிக்க முயன்ற போது, மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.
இதைத் தொடர்ந்து, தீவிர கண்காணிப்பில் நாதுராம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பதுங்கி இருந்ததை செல்போன் டவர் மூலம் ராஜஸ்தான் போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக ராஜ்கோட்டுக்கு சென்ற போலீஸார் அவனை நெருங்கும் போது நாதுராம் தன் கையில் இருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு, காரில் ஏறி தப்பிச்சென்றான். இதையடுத்து நாதுராமின் காரை துரத்திச் சென்ற போலீஸார், காரை நோக்கி 3 ரவுண்டு சுட்டனர். இதனால் காரின் டயர் பஞ்சராகி நின்றது. இதையடுத்து, நாதுராம் மற்றும் உடனிருந்த கூட்டாளி சுரேஷ் மேகுவால் ஆகிய இருவரையும் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
அதன்பின்னர், ராஜஸ்தான் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து தமிழக போலீசாரிடம் நாதுராம் ஒப்படைக்கப்பட்டான். அவனை தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, கொள்ளை வழக்கு தொடர்பாக நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் தினேஷ், பக்தாராம் ஆகிய மூவரையும் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
6 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விசாரணையில் நாதுராம் பல்வேறு தகவல்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
சொந்த மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல்வாதியாக வலம் வருவதற்காகவே சிறு வயதில் இருந்து திருட்டில் ஈடுபட்டதாக நாதூராம் தெரிவித்துள்ளான். சிறுவனாக இருந்தபோது குஜராத்தின் சூரத்தில் சேலை திருட்டை ஆரம்பித்தாகவும், அதன் பின்னர் தமது 21வது வயதில் மிகப்பெரிய கொள்ளையனாக மாறியதாகவும் கூறியுள்ளான்.
பெங்களூர் நகைக் கடையில் 10 கிலோ நகைக் கொள்ளை தான் மிகப்பெரிய கொள்ளை என போலீசாரிடம் தெரிவித்துள்ள நாதூராம், அதில் 8 கிலோ நகைகளே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளான். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தனது கும்பலுடன் இணைந்து நகை கொள்ளையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளான்.
சிறு வயதில் ஏழ்மையில் வாழ்ந்த நாதுராம் தொடர் கொள்ளையால் கிடைத்த பணத்தை கொண்டு ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் 25 அறைகள் கொண்ட அரண்மனை போன்று வீட்டை கட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. தனது கொள்ளை தொழிலுக்காக வேவு பார்ப்பவனுக்கு தாம் கொள்ளை அடித்த பொருட்களை சரிசமமாக பங்கீட்டு வந்துள்ளதால் பெரும்பாலான கொள்ளை சம்பவங்களில் நாதூராம் பிடிபடாமல் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கொளத்தூர் நகை கடையில் வேவு பார்த்தவன் பக்தாராம் என்பதும், அவனுக்கு கொடுக்கப்பட்ட 1 கிலோ தங்கநகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
நகைகள் மட்டுமல்லாமல் ஒரு கள்ளத்துப்பாக்கியும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளூர் தேர்தலில் நின்று படிப்படியாக மிகப்பெரிய அரசியல் வாதியாக வலம் வரவே இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக நாதுராம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
நாதுராம் உட்பட 3 பேரின் ஜாமின் மனு எழும்பூர் நீதிமன்றத்தில் வரும் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.