தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று மாலை அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, தேர்தலில் அதிமுக சந்திக்கும் தோல்விக்கான காரணம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது பேசிய சிலர், அ.தி.மு.க தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் என மக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. சசிகலா, தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். எனவே, அமமுகவை அதிமுகவுடன் இணைத்தால் கட்சியின் பலம் அதிகரிக்கும் என கோரிக்கை வைத்தனர்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம், "காலம் தான் பதில் சொல்லும். காலம் கனியும். காத்திருங்கள்" என கூறியதாக சொல்லப்படுகிறது.
பின்னர், தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், "அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைப்பது, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நிபந்தனையின்றி அ.தி.மு.க.வில் இணைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கிறோம். இந்த இணைப்பை சாத்தியப்படுத்த வேண்டும்" என்றனர்.
அப்படி தீர்மானம் நிறைவேறினால், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்கிறோம் என ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணைப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வருகின்ற 5ஆம் தேதி தேனி மாவட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஒருங்கிணைத்த ஊழியர் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதில் அ.ம.மு.கவை அ.தி.மு.கவுடன் ஒருங்கிணைப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு ஓபிஎஸ் கிரீன் சிக்னல் காட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil