தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், மருத்துவமனையில் உள்ள கேண்டீனுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக கட்டுக் கட்டாக பணம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக மீனாட்சி சுந்தரம் செயல்பட்டு வருகிறார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கேண்டீன் நடத்தி வருகிறார். இந்த கேண்டீனுக்கு குடீநீர் விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த கேண்டீனில் குடிநீர் தேவைக்காக தினசரி ரூ. 5,000-க்கு மேல் குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் என பலரும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டீனுக்கு வந்து உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.
கேண்டீனுக்கு வழங்கப்பட்டுவந்த குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் கேண்டீன் செயல்பாடு பாதிக்கப்பட்டது. இதனால், கேண்டீன் உரிமையாளர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து தனது கேண்டீனுக்கு குடிநீர் விநியோக இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அப்போது, குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மீனாட்சி சுந்தரம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின் அமைத்துள்ள மாரிச்சாமி என்பவர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வீடியோவில் குடிநீர் நிறுத்தப்பட்டதால், தன்னால் கேன்டீன் நடத்த முடியவில்லை என்றும், குடிநீர் இல்லாமல் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமப்படுவதாக தெரிவிக்கிறார். மேலும், மரிச்சாமி கல்லூரி முதல்வரிடம், “நீங்கள் தான் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என பேசுவது போல் காட்சிகள் உள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாரிச்சாமி முதல் தவணையாக ரூபாய் 6.5 லட்சம் ரூபாயை கொடுக்கிறார். இதே போல மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது.
அதில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வரின் குடியிருப்புக்கு செல்லும் மாரிச்சாமி அவரிடம் கட்டுக் கட்டாக பணம் வழங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோவு வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கேன்டீன் நடத்தி வரும் மாரிச்சாமியிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் ரூபாய் 16 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், மருத்துவமனையில் உள்ள கேண்டீனுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக கட்டுக் கட்டாக பணம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"