தேனி, தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 33வது தொகுதி ஆகும்.
மறுசீரமைப்புக்கு முன்பாக இது பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்தது. இப்போது தேனி மக்களவை தொகுதியாக உள்ளது.
முன்னர் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் , போடிநாயக்கனூர் மற்றும் சேடப்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
தற்போதுள்ள தேனி மக்களவை தொகுதியில் உசிலம்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் தொகுதிகளும் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும் உள்ளன.
தேர்தல் வரலாறு
தொடக்க காலத்தில் காங்கிரஸ் வென்ற தொகுதி இது. பின்னர் அதிமுக, திமுக இடையே தான் இங்கு போட்டி இருந்துள்ளது. 1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சக்திவடிவேல் கவுண்டர் இத்தொகுதியின் முதல் எம்.பியாக இருந்தார்.
முகமது ஷரீஃப், எஸ்.டி.கே.ஜக்கையன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, டிடிவி தினகரன் ஆகியோர் எம்.பி.யாக இருந்த தொகுதி இது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகிய 3 முதல்வர்கள் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது இத்தொகுதிக்கு உள்ள ஒரு தனி அம்சமாகும். எனவே அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ள தொகுதியாக இருந்து வந்துள்ளது.
இதுமட்டுமின்றி, தேனி தொகுதியில் திமுக சார்பில் கம்பம் நடராஜன் 1980, ஞானகுருசாமி 1996, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரூண் 2004, 2009 தேர்தல்களில் வென்றுள்ளனர்.
பெரியகுளம் மக்களவை தொகுதியில் 2009 வரை வென்றவர்கள் (Credit: Wikipedia)
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, 2009-ல் காங்கிரஸ் கட்சியின் ஹாரூன், 2014-ல் அதிமுகவின் ஆர்.பார்த்திபன், 2019-ல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான அதிமுகவின் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றனர்.
2019 மக்களவை தேர்தல்
கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 33 பேர் போட்டியிட்டனர்.
இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் ஆவார்.
வாக்காளர்கள் விவரம் (2024)
ஆண் - 7,92,195
பெண் - 8,20,091
மூன்றாம் பாலினத்தவர் - 217
மொத்த வாக்காளர்கள் - 16,12,503
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
ஆண்டிப்பட்டி - மகாராஜன் (திமுக)
பெரியகுளம் (தனி) - சரவண குமார் (திமுக)
போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர் செல்வம் (அதிமுக)
கம்பம் - ராமகிருஷ்ணன் (திமுக)
சோழவந்தான் (தனி) - வெங்கடேசன் (திமுக)
உசிலம்பட்டி - ஐயப்பன் (அதிமுக)
தேனி தொகுதியில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்
தி.மு.க.- தங்க தமிழ்ச்செல்வன்
அ.தி.மு.க.- நாராயணசாமி
பா.ஜ.க.- டிடிவி தினகரன் (அமமுக)
நா.த.க.- மதன் ஜெயபால்
இவர்களுடன் சுயேச்சைகள் உட்பட 25 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள் 2024
தங்க தமிழ்ச்செல்வன்- 571493
டிடிவி தினகரன்-285942
நாராயணசாமி- 152375
மதன் ஜெயபால்- 74050
இதன்மூலம் தேனி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 285551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேனியில் தினகரன் கடும் போட்டி அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அவரின் மனைவியும் பிரசார களத்தில் தீவிரம் காட்டி கவனம் ஈர்த்தார். எனினும் பெரிய வித்தியாசத்தில் தினகரன் தோல்வியை தழுவி இருக்கிறார்.
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 25 வேட்பாளர்களில் திமுக, அமமுக தவிர 18 சுயேட்சைகள் உள்பட 23 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.