NEET/ Chennai : சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா 2019-2020-ம் ஆண்டு ‘நீட்’தேர்வின் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன், அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் உதித்சூர்யா படிக்கும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்று வந்திருந்தது
அதில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து தான் ‘நீட்’தேர்வில் வெற்றி அடைந்த தாகவும், நீட் தேர்வு விண்ணப்பத்தில் உள்ள மாணவரின் புகைப்படத்திற்கும் தற்போது தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் உதித்சூர்யாவின் புகைப்படத்திற்கும் உள்ள வித்தியாசங்களையும் அந்த மின்னஞ்சலில் வெளிப்படுத்தினார். பின்னர், விஷயம் விஸ்வரூபம் எடுக்க, தமிழக அரசு தனிப்படை அமைத்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் எழும் பல கேள்விகள்:
கண்டிப்பாய் ஒரு பெரிய நெட்வொர்க் இல்லாமல் இது சாத்தியமாகாது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் . உதரணமாக, உதித்சூர்யா மும்பையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வை அம்மாநிலத்திலே எழுதியுள்ளார். எனவே, இந்த பயிற்சி மையத்தின் பங்கு என்ன? ஏற்கனவே, ஐ ஏ எஸ் போன்ற கட்டுகோப்பான தேர்வில் கூட நிறைய பயிற்சி மையங்கள் முறை கேடுகளில் ஈடுபட்டத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம்.
அப்படியானால், உதித்சூர்யா போன்று இன்னும் எத்தனை நபர்கள் இவ்வாறு முறைகேடு செய்துள்ளனர். ஏற்கனவே, உதித்சூர்யா போன்று ஐந்து மாணவர்கள் முறைகேடு செய்துள்ளனர் என்ற செய்தி தற்போதே அடிபட ஆரம்பித்துவிட்டன.
பிறகு மும்பை தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் எப்படி இந்த வித்தியாசத்தை உணராமல் இருந்திருக்க முடியும். தேர்வு கண்காணிப்பு பணியில் உள்ளவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற கேள்வியும் நம் முன் வருகிறது.
தேர்வு முடிந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு தான் ஒருவர் மருத்தவக் கல்லூரியைத் தேர்வு செய்ய முடியும். அப்படியானால், கலந்தாய்வில் கலந்து கொண்டது யார்? உதித்சூர்யா வா ? இல்லை ஆள் மாறாட்டம் செய்தவரா? கலந்தாய்வில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு எப்படி இது தென்படாமல் போனது? என்ற விவாதமும் தற்போது எழுகின்றது.
போலிஸ் விசாரனையில் தான் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் வரும் என்று நம்பப்படுகிறது.