தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.
நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை:
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
மக்களின் கருத்தை கேட்ட பிறகே நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும், சட்டவிதிகளுக்கு புறம்பாக இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் சர்மா உள்ளிட்டோர், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.
அதில், நியுட்ரினோ திட்டத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு ஏற்படுத்தி தருவதை மட்டும் தமிழக அரசு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தனது உத்தரவை மறு தேதி குறிப்பிடாமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்தது.மேலும், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.