தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 14 அன்று விசாரணைக் கைதி ஒருவரை காவலர்கள் மூர்க்கத்தனமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்டக் காவல் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த வீடியோ பதிவு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. வழக்கறிஞர் ஒருவர் தனது வழக்கு சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் இந்த பதைபதைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்டக் காவல் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், "கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அன்று தேவதானப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளார். தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவரைச் சமாதானப்படுத்தி, காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர் மீது பிரிவு 296 (b) பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், காவல் நிலையத்தில் அவரை கட்டுப்படுத்தும் முயற்சியின்போது, அவர் மீது அதிகப்படியான பலப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.