scorecardresearch

வேட்பு மனுவில் சொத்து விவரம் மறைப்பு: ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

வழக்கைத் தொடுத்த மிலானிக்கு சாட்சிய பாதுகாப்பு சட்டம் 2018-ன் படி உரிய காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வேட்பு மனுவில் சொத்து விவரம் மறைப்பு: ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

கடந்த 2019இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அதே போல், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கலின்போது இருவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளிட்ட குறித்து உண்மையை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள எம்பி., எம்எல்ஏக்களுக்கான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மிலானி தனது மனுவில் கூறியிருப்பதாவது, “2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.ப.ரவீந்திரநாத், சட்டசபைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் வென்ற ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களில் சொத்து, ஆண்டு வருமானம், கடன், கல்வித் தகுதி உள்ளிட்ட விபரங்களை மறைத்து, வேண்டுமென்ற தவறான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராகவும், பலமுறை அமைச்சராகவும் இருந்தவர் என்பதால் அரசியல் செல்வாக்கு மிகுந்தவராக உள்ளார். நானொரு சாதாரண நபர் என்பதால், அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள எனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, CRPC-190,200 ஆகிய பிரிவுகளின் கீழ் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குத் தொடர போதுமான முகாந்திரங்கள் உள்ளது. எனவே இந்த வழக்கு உடனடியாக தேனி மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ப.ரவிந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

மேலும், வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பிப்.7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இது தவிர வழக்கைத் தொடுத்த மிலானிக்கு சாட்சிய பாதுகாப்பு சட்டம் 2018-ன் படி உரிய காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Theni special court order to file case against ops and ravindranath