/tamil-ie/media/media_files/uploads/2022/09/Madurai-High-Court.jpg)
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை
தென்காசி மாவட்டம், ராயகிரி கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமை வன்கொடுமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த மார்ச் மாதம், தென்காசி மாவட்டம், ராயகிரி கிராமத்தில், தனது நண்பரின் தந்தை இறந்துவிட்டதால் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த நண்பர்களுடன் சென்றேன். அப்போது அங்கே இருந்த சிலர், இந்த இடத்திற்கு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நீ எப்படி இங்கே வரலாம் என்று சாதியைக் கூறி திட்டியதாகத் தெரிவித்தார். அதோடு, நான் அங்கே இருந்தால், இறந்தவருக்கு இறுதி சடங்கு நடத்த நாங்கள் யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறி மிரட்டியதால் நான் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன்.
இதையடுத்து, மறுநாள், அவர்கள், என்னை அழைத்துச் சென்ற நண்பர்கர்களை அழைத்து இறப்பு நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நபரான என்னை இறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததால் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்ததோடு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அது மட்டுமில்லாமல், அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் முறையாக விசாரணை செய்யவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தென்காசி மாவட்டம், ராயகிரி பகுதியில் நடந்த தீண்டாமை வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தென்காசி மாவட்ட அட்சியர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.