/indian-express-tamil/media/media_files/2025/05/20/FkYcm777o8mgsmQ551BL.jpg)
Tenpennai river flood
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பி உள்ளது.
இதனிடையே தொடர் மழையின் காரணமாகவும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதாலும் கேஆர்பி அணை அதன் மொத்த உயரமான 52 அடியில் தற்பொழுது 51 அடியை எட்டியுள்ளது.
கேஆர்பி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2400 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,208 கன அடியாகவும் அதிகரித்துள்ளது. கே.ஆர்.பி அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் அணையின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கையாக அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் அணையின் தரைபாலமானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தொடர்ந்து அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து சாத்தனூர் அணை வரையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.