/indian-express-tamil/media/media_files/2025/04/17/p0eVexGlvv2nRafd2yX0.jpg)
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க அ.தி.மு.க-பா.ஜ.க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி அரசு அமையும் என்று கடந்த 5 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அமித்ஷாவின் கருத்துக்கு முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். தி.மு.க.வை வீழ்த்தவே பா.ஜ.க-வுடன் கைகோர்த்தோம். அதே நேரம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், கருப்பணன், வளர்மதி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து, அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூறியிருந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை சென்னை கிண்டியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது தி.மு.க., கொள்கை. தற்போது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சரியான முடிவு எடுத்து இருக்கிறார். ஊழல் குறித்து அமித்ஷா சொல்லி இருக்கிறார். இது குறித்து ஏதும் வாய் திறக்காமல் தி.மு.க., இருக்கிறது.
திடீரென இந்த கூட்டணி அமையவில்லை. பொதுக்குழு, செயற்குழுவை கூட்டிதான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக அதிமுக வாக்களித்துள்ளது. அ.தி.மு.க, இஸ்லாமியர்கள் இடையே ஒரு நல்ல உறவு உள்ளது. 2026-ல் இ.பி.எஸ். தனியாகத்தான் ஆட்சி நடத்துவார். கூட்டணி ஆட்சி கிடையாது. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். என யாரும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. இதுவரை நடந்த எந்த தேர்தலிலாவது கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நடந்திருக்கிறதா? தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை, இனியும் நடக்க போவதில்லை. கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. என்.டி.ஏ வென்றால் அ.தி.மு.க தனித்தே ஆட்சியமைக்கும் என்றார்.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி ஆட்சி குறித்து கழகப் பொதுச்செயலாளர் நேற்றைய தினம் விளக்கி கூறியிருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக விமர்சித்த ஜெயக்குமார், கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் போல் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.