உரிமம் இல்லாத ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதித்துள்ளதாகவும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கியுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
ஆன்லைன் மருந்து விற்பனை - யாருக்கு உரிமை இல்லை
இந்நிலையில், உரிமம் பெற்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், தாங்கள் மருந்துப் பொருட்களை வாங்கி விற்பனை மட்டுமே செய்வதாகவும் கூறி, தங்களையும் இந்த வழக்கில் ஒரு தரப்பு வாதியாக சேர்க்க வேண்டுமென, tnmeds.com என்ற ஆன்லைனில் மருந்து விற்பனை நிறுவனம் சார்பில் நீதிபதி மகாதேவன் முன் முறையிடப்பட்டது
இதை கேட்ட நீதிபதி, உரிமம் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை விதித்ததாகவும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்தார். முன்னதாக, இந்த தடையை நீக்க கோரி ஆன்லைனில் மருந்து விற்பனை நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.