Tamil Nadu News: இலவச டிக்கெட் வேண்டாம் என்று மறுத்த மூதாட்டியின் வைரலாக விடியோவை அடுத்து, அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு தமிழக மக்களினிடையே சர்ச்சையாக பரவி வருகிறது. தமிழக அரசு பெண்களுக்காக வழங்கிய இலவச பேருந்து பயணத்தை "ஓசி பேருந்து" என்று குறிப்பிட்டதால் மக்களினிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கோவை மாவட்டம் மதுக்கரையில் இருந்து பாலத்துறை சென்ற அரசு பேருந்தில் துளசியம்மாள்(வயது 68) என்ற மூதாட்டி பயணம் செய்த போது இலவச பயணச்சீட்டு வேண்டாம் என கூறி நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டார்.
மூதாட்டியிடம் பேருந்து நடத்துனர் இலவச பயணச் சீட்டு கொடுத்தபோது, "நான் ஓசில வர மாட்டேன் காசு வாங்கலைனா எனக்கு டிக்கெட் வேண்டாம்; தமிழ்நாடே போனாலும் பரவாயில்லை நான் இப்படித்தான் வருவேன் வேண்டாம்னா வேண்டாம்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இது தொடர்பாக திமுகவினர் மதுக்கரை காவல் நிலையத்தில், அதிமுக ஐ.டி விங்கை சேர்ந்த பிரித்விராஜ் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளித்திருந்தனர் .
அதில் வேண்டுமென்றே அதிமுகவை சேர்ந்த துளசியம்மாள் பாட்டியை பேருந்தில் பயணம் செய்ய வைத்து நடந்துநரிடம் தகராறு செய்து, அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மூதாட்டி துளசியம்மாள் அதிமுகவை சேர்ந்தவர் என்பது உறுதியானது. இதனையடுத்து மூதாட்டி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக, சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவியது.
இதுகுறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் பத்ரி நாரயாணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், "மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதியப்படவில்லை என அதிகார்வபூர்வமாக சொல்கின்றேன்
இந்த சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் கோவை மாவட்டத்தில் பதியவில்லை. தவறான தகவல் எப்படி பரவியது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்", என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.