மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் மோசமான சூழலில் இருந்து இந்தியா முன்னேறிச் செல்ல வேண்டும் என்று வெகு காலமாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். கழிவு நீர் தொட்டி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி, கழிவு நீர் தொட்டியிலேயே விழுந்து உயிர் துறக்கும் அவலங்கள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. 5 நாட்களுக்கு முன்பு மகாராஷ்ட்ராவின் மும்பை பகுதியில் உள்ள ஏக்தா நகர் பகுதியில் மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்கிறது ஈடிவி பாரத் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று.
தமிழகத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்றும், இது நாள் வரையில் தேசிய அளவில் துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு ஏதேனும் நடத்தப்பட்டுள்ளதா என்றும் இன்று தமிழக திமுக எம்.பி. முகமது அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மேலவையில் பதில் அளித்துள்ளார்.
மனிதக்கழிவுகளை கைகளால் சுத்தம் செய்யும் வேலையில் பணியமர்த்த தடை மற்றும் துப்புரவுப்பணியாளர் மறுவாழ்வு சட்ட விதிமுறைகள் 2013-ல் குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றாமல்செப்டிக் டேங்குகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்ததில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதே சட்டத்தின் கீழ் வரையறை செய்யப்பட்டிருக்கும் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் பணியின் போது யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர்.
அமைச்சரின் பதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
தேசிய துப்புரவுப் பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளில் துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை குறித்து தேசிய அளவில் கணக்கெடுப்பு எதையும் நடத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
துப்புரவு பணியாளர்கள் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் துப்புரவுப் பணியாளர்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்குவதாக கூறிய அமைச்சர் அதில் இருக்கும் சிறப்பு அம்சங்களையும் பட்டியலிட்டார்.
துப்புரவுப் பணியாளர் குடும்பமாக அடையாளம் காணப்பட்ட குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு ரூ. 40 ஆயிரம் உதவித் தொகையாக ஒரு முறை வழங்கப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு ஊக்கத் தொகையாக மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
துப்புரவு தொடர்பான புதிய திட்டங்களை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட சுயதொழில் துவங்க கடன் பெற விரும்பும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மனிதக் கழிவுகளை அகற்றும் நபர்களாக அடையாளம் காணப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டங்கள் மூலமாக பயன் அடைந்தவர்களின் பட்டியலையும் அவர் தன்னுடைய எழுத்துப்பூர்வ பதிலில் கீழ் காணுமாறு குறிப்பிட்டுள்ளார்.
எண்ணிக்கைகளும் வரைமுறையில் அமைந்திருக்கும் குளறுபடிகளும்
2010 முதல் 2020 மார்ச் வரை, அதாவது 10 வருடங்களில் செப்டிக் டேங்குகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது 631 பேர் இறந்துள்ளனர் என்று தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த வருடம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மக்களவையில் பேசிய இதே அமைச்சர் 2020ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் செப்டிக் டேங்குகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது 340 நபர்கள் இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு பி.பி.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், துப்புரவுப் பணியாளர்கள் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர், பெஸ்வாடா வில்சன் ”மேற்கூறிய காலகட்டத்தில் 472 துப்புரவுத் தொழிலாளர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது இறந்துள்ளனர். அதில் 340 பேரின் உயிரிழப்பை அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் 132 நபர்களின் இறப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை” என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளது.
கையால் மனிதர்களின் கழிவுகளை அள்ளுவதையே மேனுவல் ஸ்கேவேஞ்சிங் என்று வகைப்படுத்துகிறது 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு கூட்டத் தொடரில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் அரசு மேனுவல் ஸ்கேவேஞ்சிங் என்ற பதத்திற்கு பதிலாக செப்டிக் டெங்குகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது இறந்தவர்கள் என்றே பட்டியலிடுகிறது. இதனால் மனிதக் கழிவுகளை கைகளால் சுத்தம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைப் போன்று தோற்றம் உருவாக்கப்பட்டு கழிவறைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி பணியாற்றும் நபர்கள் மீதான கவனம் குறைக்கப்படுகிறது.
இறப்புகள் உள்ளன - தலைநகரமே உதாரணம்
மனிதக் கழிவுகளை கையால் அகற்றினால் மட்டுமே அவர்கள் துப்புரவுப் பணியாளர்கள் என்ற ஒரு புரிதலில் இருக்கிறது மத்திய அரசு. கழிவுநீர் தொட்டியில் இறங்கி பணியாற்றும் நபர்களுக்கு இந்த பெயர் எப்போதும் சூட்டப்படுவதில்லை. அப்போது அந்த தொட்டியில் இருக்கும் கழிவுகள் மனிதக் கழிவுகள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
மனிதக் கழிவுகளை கைகளால் சுத்தம் செய்யும் வேலையில் பணியமர்த்த தடை மற்றும் துப்புரவுப்பணியாளர் மறுவாழ்வு சட்டம் 2013, சட்டத்திற்கு புறம்பாக செட்டிக் டேங்கை சுத்தம் செய்ய தொழிலாளர்களை பணியமர்த்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவாக கூறியுள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 நாட்கள் இடைவெளியில் மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் சென்னையில் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
ஜனவரி 15ம் தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்த நபர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அதே மாதம் 19ம் தேதி அன்று தாம்பரம், வரதராஜபுரம் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதி ஒன்றில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி பணியாற்றிய இரண்டு பேர் மூச்சுத் திணறல் காரணாமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி நகரில் வசித்து வந்த ராஜேஷ் ஆவார். மற்றொரு நபர் செங்கல்பட்டு மாவட்டம் மன்னிவாக்கத்தை சேர்ந்த ஏழுமலை என்பது குறிப்பிடத்தக்கது.
கழிவு நீர் தொட்டியில் இறங்கி மயங்கியவரை காப்பாற்றச் சென்று மரணித்தவர்கள் இங்கே ஏராளம். கழிவு நீர் தொட்டி மட்டுமின்றி ரசாயக கழிவு, சாய ஆலைகளின் கழிவு நீர் தொட்டியில் இறங்கி உயிரிழந்தவர்களின் கண்ணீர் கதைகளும் இங்கு ஏராளம். யாரும் இறக்கவில்லை என்று கூறுவதற்கு பதிலாக மேனுவல் ஸ்கேவஞ்சர் என்ற பதத்தின் அர்த்தத்தை மாற்றி, மேற்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் இத்தகைய பணிகளை தங்களின் வாழ்வதாரத்திற்காக மேற்கொள்ளாமல் இருக்கும் வகையில் பொருளாதார மேம்பட்டு திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.