/indian-express-tamil/media/media_files/2025/08/14/ravikumar-mp-speech-2025-08-14-08-11-04.jpg)
மக்களவையில் வி.சி.க எம்.பி ரவிக்குமார் தேசிய சமூக உதவி திட்டத்தில் முதியோர் பென்ஷன் குறித்து கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்:
“தேசிய சமூக உதவி திட்டத்தில் முதியோர் பென்ஷன் உயர்த்தும் திட்டம் உள்ளதா?” என்று மக்களவையில் வி.சி.க எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
மக்களவையில் வி.சி.க எம்.பி ரவிக்குமார் தேசிய சமூக உதவி திட்டத்தில் முதியோர் பென்ஷன் குறித்து கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை எழுப்பினார்:
“தேசிய சமூக உதவி திட்டத்தில் (என்.எஸ்.ஏ.பி - NSAP) கடைசியாக எப்போது உதவித்தொகை மற்றும் வருமான வரம்பு மாற்றியமைக்கப்பட்டது, பணவீக்கத்திற்கு ஏற்ப மத்திய அரசின் பங்களிப்பு ஏன் உயர்த்தப்படவில்லை, உதவித்தொகையை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்துவதற்கான திட்டம் உள்ளதா, 2011 முதல் 2024 வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதற்கென எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டது?” என்ற கேள்விகளை ரவிக்குமார் எம்.பி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் பின்வருமாறு பதில் அளித்துள்ளார்:
பகுதி (அ):
தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில், 60 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதவித்தொகை 2007-ல் ரூ.75-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டது.
80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, ஓய்வூதியத் தொகை 2011-ல் ரூ.200-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது.
தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் விதவை ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டங்களுக்கான உதவித்தொகை 2012-ல் கடைசியாக ரூ.300 ஆக மாற்றியமைக்கப்பட்டது.
80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.500 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேசிய சமூக உதவி திட்டத்தின் தேசிய குடும்ப நலத் திட்டத்தின் (National Family Benefit Schemes) கீழ் வழங்கப்படும் உதவித்தொகை 2012-ல் ரூ.10,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டது.
இந்தத் திட்டம், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்காக ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
பகுதி (ஆ):
தேசிய சமூக உதவி திட்டம், மிகவும் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு அடிப்படை நிதி ஆதரவை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது.
தேசிய சமூக உதவி திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசின் உதவித்தொகைக்கு மேல் கூடுதல் தொகையை வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன.
தற்போது, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தேசிய சமூக உதவி திட்டத்தில் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் ஒரு பயனாளிக்கு மாதம் ரூ.50-லிருந்து ரூ.5700 வரை கூடுதல் தொகையை வழங்குகின்றன.
இதன் விளைவாக, பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தேசிய சமூக உதவி திட்டத்தின் ஓய்வூதியதாரர்கள் சராசரியாக மாதத்திற்கு ரூ.1100 ஓய்வூதியமாக பெறுகிறார்கள்.
15-வது நிதிக் குழுவின் காலப்பகுதியான 2025-26 நிதியாண்டு வரை, தேசிய சமூக உதவி திட்டத்தை (என்.எஸ்.ஏ.பி - NSAP) தற்போதைய வடிவத்திலும், தற்போதைய உதவித்தொகை விகிதத்திலும் தொடர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பகுதி (இ) மற்றும் (ஈ):
தேசிய சமூக உதவி திட்டத்தில் (என்.எஸ்.ஏ.பி) திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதற்கான எந்தவொரு திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் (IGNOAPS) கீழ், 2011 முதல் 2024 வரை மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக விடுவிக்கப்பட்ட நிதி விவரங்கள் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.” என்று அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரவிக்குமார் எம்.பி குறிப்பிடுகையில், “அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் அளித்துள்ள புள்ளி விவரம், மக்களுக்குப் பயனளிக்கும் ஓய்வூதியத் திட்டங்களின் தொகை காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ ஆட்சிக் காலத்தில்தான் சீராய்வு செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நாட்டின் மூத்த குடிமக்களைப் பற்றியும் நலிந்த பிரிவினரைப் பற்றியும் மோடி அரசாங்கம் கொஞ்சம் கூட ஆக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.” என்று விமர்சித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.