நிலவேம்பு விவகாரம் தொடர்பாக, கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக் கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்.’ என்று ட்விட் செய்தார். இது தமிழகத்தில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும், நிலவேம்பு கசாயத்தை கொடுக்கக் கூடாது என்று சொல்வதா? அலோபதிக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று கடுமையான விவமர்சனம் எழுந்தது.
தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் தேவராஜன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமல்ஹாசன் மீது புகார் கொடுத்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன், ‘’நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதை, நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று சிலர் செய்தியாய் பரப்புவது எந்த வகையிலும் நியாயமில்லை.
ஆர்வக் கோளாறில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல், மருந்துகளை என் இயக்கத்தான் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு, வைத்தியர்கள் உதவியுடன் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த உதவியோ, அறிவுரையோ இல்லாமல், மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன்.
மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றால், அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால், மருத்துவ அறிவுரை இல்லாமல், ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்திவைக்கச் சொல்லியிருக்கிறேன். சித்தா, அலோபதி என்ற தனிசார்பு எனக்கில்லை.
அதுவரை டெங்குவை எப்படி கட்டுப்படுத்துவது? என்றால், பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம். இத்தனை நாள் ஈ ஓட்டாமல், கொசுவை விரட்டியிருக்கலாம்” என்று விளக்கம் கொடுத்தார்.
சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்ய தாமதப்படுத்தியதால், தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகினார். ’கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் இருந்து தேவராஜனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘நீங்க கொடுத்த புகாரின் பேரில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்த முகாந்திரம் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.