சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் மாணவி ஒருவர் தொடர்ந்து 10 நாட்களுக்கு கையெழுத்திடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், மாணவி கையெழுத்திடும் வீடியோ குறித்து ஸ்டான்லி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிடி நெக்ஸ்ட் பேப்பர் ஆகியவற்றில் வெளியான வீடியோ க்ளிப் தொடர்பாக 02.05.2022 அன்று காலை 11.30 மணி அளவில் கல்லூரி க்வுண்சில் ஹாலில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை துணை முதல்வர் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி தலைமையில் 8 துறைத்தலைவர்கள் அடங்கிய குழுவினரால் நடத்தப்பட்டது.
வீடியோ க்ளிப்பில் சம்மந்தப்பட்டவர் மரு.பி.சரஸ்வதி, மருந்தியல் முதலாமாண்டு மருத்துவ மாணவராக 29.03.2022 தேதியில் சேர்ந்துள்ளார். இவர் இத்துறையில் சேர்ந்ததில் இருந்து மருத்தியல் துறையில் பராமரிக்கப்படும் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இட்டு வருகிறார். இப்பதிவேடு அத்துறைத்தலைவர் கட்டுப்பாட்டில் உள்ளது.
கல்லூரி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருகைப்பதிவேடு முதுநிலை கலந்தாய்வு இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில் மாணவர்களின் கையொப்பதிற்காக திறக்கப்பட்டது. மேற்கண்ட மாணவி இந்தப்பதிவேட்டில் கையெழுத்திடும் போது மருத்துவமணை ஊழியர் ஒருவர் அவர் கையொப்பமிட்டதை வீடியோ பதிவு எடுப்பதை கவனிக்கவில்லை.
பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிடி நெக்ஸ்ட் பேப்பர் ஆகியவற்றில் வெளியான வீடியோ க்ளிப்பினை பார்த்து கண்காணிப்பு கேமராவில் பதிவுகள் அனைத்தும் குழு உறுப்பினர்களால் கண்காணிக்கப்பட்டது. அவ்வீடியோ பதிவினை எடுத்தவர் இவ்வலுகத்தில் தடவியல் மருத்துவத்துறையில் அறிவியல் அதிகாரியாக பணிபுரியும் திரு.லோகநாதன் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேற்கண்ட முதுநிலை மருத்துவ மாணவி தனக்கு பயமாக இருப்பதாகவும், மிகுந்த மனவுளைச்சல் தருவதாகவும் இவ்வலுவகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதன்மூலமாக வருகைப்பதிவேட்டில் அம்மாணவி மற்ற மருத்துவர்களுக்கோ தான் வராத நாட்களுக்கோ கையொப்பம் இடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இறுதியாக இக்கல்லூரியில் வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதை குழு அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் , ஸ்டான்லி மருத்துவமனை தடயவியல் அதிகாரி மீது, கல்லூரி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.