ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குண்டுரி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 26 குக்கிராமங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கதம்பூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கதம்பூர் கிராமத்திற்கு செல்ல காலை 5.30 மணிக்கு ஒரேயொரு பேருந்து மட்டுமே குண்டுரி கிராமத்திற்கு வரும். அதனால், பள்ளி மாணவர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பள்ளிக்கு தயாராகின்றனர். இந்த பேருந்தை தவறவிட்டால் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தை சுற்றி கடினமான பாதையில் நடந்துசென்று பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கும்.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. குண்டுரி மற்றும் அதனை சுற்றியுள்ள 26 குக்கிராமங்களில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயம் தான் அங்குள்ளவர்களின் பிரதான தொழில். குண்டுரி கிராமத்திலேயே ஒரு தனியார் பள்ளி இருந்தாலும், பல குடும்பங்களின் பொருளாதார நிலைமை, பணம் செலவழித்து பிள்ளைகளை படிக்க வைக்கும் நிலையில் இல்லை. அதனால், அங்குள்ள 32 மாணவர்கள் (18 பெண்கள்) கதம்பூருக்கு சென்று அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களும் இதே அவலத்திற்கு ஆளாகின்றனர். கல்லூரி மாணவர்கள் 18 பேரில் (7 பெண்கள்), குண்டுரி கிராமத்திலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சத்தியமங்கலம் அரசு கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.
அதிகாலை 4 மணிக்கே எழுந்து இங்குள்ள மாணவர்கள் பள்ளிக்கு தயாராகின்றனர். இருக்கும் ஒரேயொரு பேருந்தை தவறவிட்டால், அன்றைக்கு பள்ளிக்கே போகமுடியாது என 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தெரிவிக்கிறார்.
பள்ளிக்கு செல்வதற்கு மட்டும் இந்த கொடுமை இல்லை. மீண்டும் வீட்டுக்கு வருவதும் இந்த மாணவர்களுக்கு பெரும்பாடாக உள்ளது. அந்த பேருந்து இரவு 7 மணிக்குதான் மீண்டும் குண்டுரிக்கு திரும்பும். அதனால், கல்லூரி மாணவர்களுக்கு 4 மணிக்கெல்லாம் வகுப்பு முடிந்துவிட்டாலும், 3 மணிநேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் பேருந்து வர இரவு 8.30 மணிகூட ஆகலாம் என மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் தேர்வு நேரங்களில் மதியம் ஒரு மணிக்கெல்லாம் பள்ளி முடிந்துவிடும். ஆனால், அவர்கள் இரவு 8.30 மணி வரை பேருந்துக்காக காத்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை. தங்கள் பிள்ளைகளுக்கு அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து உணவு தயாரிக்கும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் தாய்மார்கள்.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, பள்ளி மாணவர்களுக்கென தனியாக மினி பேருந்து ஏற்பாடு செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார். மேலும், அடுத்த கல்வியாண்டில் குண்டுரியில் உள்ள தனியார் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் பாலமுரளி தெரிவிக்கையில், பள்ளி மாணவர்களின் நேரத்திற்கேற்ப பேருந்தின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.